உலகின் மதிப்பு வாய்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை சரிந்ததைத் தொடர்ந்து, முதலிடத்தைச் சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான ஆரம்கோ பிடித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வருவதாலும், பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணங்களாலும் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் மட்டுமல்லாமல் பல முக்கிய நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
சந்தை மதிப்பு
உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாக உள்ள ஆரம்கோவின் சந்தை மூலதனம் புதன்கிழமை 2.42 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. அதே நேரம் ஆப்பிள் நிறுவன பங்குகள் 2.37 டிரில்லியன் டாலர்களாக சரிந்தது.
ஆப்பிள்
உலகின் மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் மொபைல் போன்களை தயாரித்து, விற்பனை செய்யும் நிறுவனம் ஆப்பிள். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைந்துள்ளதாக அறிவித்தது.
சீனா
தங்களது பெரும்பாலான உற்பத்திக்கு ஆப்பிள் நிறுவனம் சீனாவை நம்பி இருப்பதாலும், அங்கு மீண்டும் கொரோனா பரவுவதால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணங்களாலும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே ஜூன் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் 4 முதல் 8 பில்லியன் டாலர் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெடரல் வங்கிகள் வட்டி விகிதம் உயர்வு
அமெரிக்கா மற்றும் இந்திய ஃபெடரல் வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே இந்திய பங்குச்சந்தை உள்பட உலகின் பல்வேறு நாடுகளின் சந்தை குறியீடுகளும் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
எண்ணெய் நிறுவனங்கள்
மறுபக்கம் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதை உறுதி செய்யும் விதமாக சவுதி ஆரம்கோ நிறுவன பங்கு விலை அதிகரித்து உலகின் அதிக சந்தை மதிப்பு வாய்ந்த நிறுவனமாக ஆரம்கோ உருவெடுத்துள்ளது.
ஆரம்கோ நிகர லாபம்
ஆரம்கோ நிறுவனம் சென்ற ஆண்டு தங்களது நிறுவனத்தின் நிகர லாபம் 124 சதவீதம் அதிகரித்து 110 பில்லியன் டாலர் பெற்றதாக அறிவித்தது. அதுவே 2020-ம் ஆண்டு 49 பில்லியன் டாலராக இருந்தது.
ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இப்போது வட்டி விகிதத்தை ஃபெடரல் வங்கிகள் உயர்த்தியுள்ளதால் டாலர் மதிப்பு அதிகரித்து பிறநாடுகளின் நாணய மதிப்புகளும் தொடர்ந்து சரிந்து வருகின்றன.